தங்கள் பெயர்களுக்குப் பின் சாதிப் பெயரை நடிகைகள் போட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும். அப்படி சாதிப் பெயர் வைத்துள்ள நடிகைகள் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகி வரும் புதிய படம் ‘சிநேகாவின் காதலர்கள்'. இப்படத்தை பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தை தமிழன் டிவி உரிமையாளர் கலைக்கோட்டுதயம் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது.
இதில் இயக்குனர் சீமான், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சீமான் பேசும்போது, "இன்று வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றன. தமிழ் படங்களை எடுக்கும் நண்பர்கள் தயவுசெய்து ஆங்கில கலப்பு வசனங்கள் இல்லாமல் முழுக்க தமிழ் வசனங்கள் வரும்படி படத்தை எடுக்க முன் வரவேண்டும்.
மேலும், தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகளின் பெயருக்கு பின்னால் அவர்களின் ஜாதிப் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக நீக்கவேண்டும். இயக்குநர்கள் இதனை ஆதரிக்கக் கூடாது, பார்த்துக் கொண்டு மவுனமாகவும் இருக்கக்கூடாது," என்றார். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் கீர்த்தி ஷெட்டி என்று போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment